வரலாறுகாணாத பொருளாதார திண்டாட்டங்களுக்கு மத்தியில் பாதீடு இன்று முன்வைப்பு!

வரலாறுகாணாத பொருளாதார திண்டாட்டங்களுக்கு மத்தியில் பாதீடு இன்று முன்வைப்பு!

????வரலாறுகாணாத பொருளாதார திண்டாட்டங்களுக்கு மத்தியில் பாதீடு இன்று முன்வைப்பு!
????வலி சுமக்கும் மக்கள் வழி பிறக்குமா என காத்திருப்பு
???? 45 வருடகால அரசியலில் முதன்முறையாக ரணில் முன்வைக்கும் 'முழு பட்ஜட்'
???? மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து அவதானம்
????கொழும்பில் முகாமிட்டு பட்ஜட் குறித்து கட்சிகள் ஆராய்வு


இலங்கையில் வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்புலத்தில், 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று  (13)  முன்வைக்கப்படவுள்ளது. 
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். 
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. பாதீட்டு கூட்டத்தொடரை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் நிதி அமைச்சரின் பாதீட்டு உரை மாத்திரமே இடம்பெறும். 
நாளை முதல் டிசம்பர் 22 ஆம் திகதிவரை 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் இடம்பெற்று, அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பின்னர் குழுநிலை விவாதம் (அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு) ஆரம்பமாகும். 
டிசம்பர் 8 ஆம் திகதி மாலை பாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும். 
கொரோனா பெருந்தொற்றையடுத்து ஏற்பட்ட முடுக்கம், சுற்றுலாத்துறை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. அதன்பின்னர் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியதால் நிலைமை மோசமானது. 
கடனை மீள செலுத்த முடியாத நாடு, வங்குரோத்து அடைந்த நாடு என இலங்கை சர்வதேச மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கடும் சவால்களுக்கு மத்தியிலும் பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளதால் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் அறிவதற்கு பல தரப்புகளும் ஆர்வமாக உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் ஆயிரத்து 785 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களுக்காக சில சலுகைத் திட்டங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து  விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சமூக நலன்கள், கட்டாயம் தேவைப்படும் மக்களுக்கு  வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.
2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான  நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணிலின் முதல் பாதீடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் பயணத்தில் நிதி அமைச்சராக, ஒரு ஆண்டுக்குரிய முதலாவது வரவு - செலவுத் திட்டத்தை இம்முறை முன்வைக்கின்றார். 
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது, இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால பாதீட்டை முன்வைத்திருந்தார். எனினும், முழு ஆண்டுக்குரிய பாதீட்டை முன்வைப்பது இதுவே முதன் முறையாகும்.
1977 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது. பிரதி அமைச்சர், அமைச்சர், பிரதமர் என பதவிகளை வகித்திருந்தாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு நிதி அமைச்சு பதவி கிட்டியது.  
இலங்கையின் முதலாவது நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன.  
இலங்கை அரசியல் வரலாற்றில் நிதி அமைச்சு பதவியை வகித்தவர்களில் ரோனி த மேல் (ஐக்கிய தேசியக்கட்சி) என்பவரே 12 தடவைகள் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். மஹிந்த ராஜபக்ச 11 தடவைகள் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதேவேளை, அரசியல் கட்சிகளின் விசேட கூட்டங்கள் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதீடு பற்றி ஆராயவே கட்சிகள் கூடுகின்றன.

ஊடகவியலாளர் - ஆர்.சனத்
raasanath@gmail.com