'2024' ஜனாதிபதி தேர்தலில் போட்டி - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

'2024' ஜனாதிபதி தேர்தலில் போட்டி - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக முடியும். முதல் முறை ஜனாதிபதியாக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் மூன்றாவதாக இணைந்தார் டொனால்டு ட்ரம்ப்.

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு ட்ரம்ப், "விரைவில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார். சொன்னபடியே நவ.15 ஆம் திகதி அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஃப்ளோரிடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், "2024 ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. ஜனநாயக கட்சியினரை வீழ்த்துவேன். அமெரிக்காவை மீண்டும் வலுப்படுத்த நான் வெற்றி பெறுவது அவசியம்" என்று சூளுரைத்தார். கூடவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான பூர்வாங்க எழுத்துபூர்வ பணியையும் தொடங்கினார். இதுவரை ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என்ற இருபெரும் கட்சிகளிலும் யாருமே 2024 அதிபர் தேர்தல் பற்றி பேசாத நிலையில் ட்ரம்ப் முதல் நபராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.