ஜனாதிபதி பதவி விலகமாட்டார்  - அரசாங்கம்  திட்டவட்டம்! 

ஜனாதிபதி பதவி விலகமாட்டார்  - அரசாங்கம்  திட்டவட்டம்! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகமாட்டாரென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மீண்டும் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, எண்ணை தட்டுப்பாடு என்பன விரைவில் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்க்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். எனவே, இவ்வாறான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்.

அமைச்சர்கள் பதவி விலகியமை குறித்து அனுர கேள்வி எழுப்புகிறார். எல்லோரும் இணைந்து இந்த பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்காகவே நாங்கள் பதவிகளைத் துறந்தோம். அதற்கோ ஜனாதிபதியும் அழைப்பு விடுத்தார்.

ஆனால், மக்கள் பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டும், பாடசாலைகள் மூடப்பட வேண்டும், நாட்டில் ஸ்திரத் தன்மையற்ற நிலை நிலவ வேண்டும், நாட்டில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்பதே உங்களுக்கு வேண்டும்.

எனவே, போராட்டங்களை திசை திருப்பி 83ஆம் ஆண்டு நடந்ததைப்போன்ற ஒரு நிலையைக் கொண்டுவரவேண்டாம். நாட்டை அழிக்க வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல ஒன்றிணைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும் என அனுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.