சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம் ; சமன் ஏக்கநாயக்க

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம் ; சமன் ஏக்கநாயக்க

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையானது உலகளாவிய பெறுமதிச் சங்கிலிகளுடனும் தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப் பெரிய பொருளாதாரங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் பிராந்திய விரிவான பொருளாதாரப் பங்காளித்துவத்துடன் (RCEP) இணைக்கும் கிழக்குப் பிராந்தியத்திற்கு விரிவடையும் என்பது ஜனாதிபதியின் பார்வையாகும்.

மேலும், ஜனாதிபதியின் செயலாளர், தனியார் துறை பங்குதாரர்கள் இறுதிப் பயனாளிகள் என்பதால், இந்த அபிவிருத்தி முயற்சியில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நவம்பர் (16) நிதியமைச்சில் வர்த்தக சபைகள் மற்றும் தொழில் ஆலோசனைக் குழுக்களுக்கான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான விழிப்புணர்வு அமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

திறைசேரி செயலாளர், வெளியுறவு, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில்  கலந்துகொண்டனர்.