முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்!

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்குசன் (தலா 7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. 

அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது. அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான் (10 விக்கெட்), ஷாஹின் ஷா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். 

இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.