ஒக்டோபர் மாத விலைச் சுட்டெண் வீழ்ச்சி!

ஒக்டோபர் மாத விலைச் சுட்டெண் வீழ்ச்சி!

2021 ஒத்தோபரிலிருந்து அதிகரிக்கின்ற போக்கில் தொடர்ந்து சென்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 70.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 85.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 80.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 62.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 61.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மாதத்திற்கு மாதம் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் அதன் அண்மைய மிதமடைதல் போக்கினைத் தொடர்ந்து, 2022 ஒத்தோபரில் 0.28 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 0.41 சதவீதமாகவிருந்த உணவு வகையிலுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் வீழ்ச்சி, இதற்கு பிரதானமாகப் பங்களித்தது. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், அரிசி மற்றும் கருவாடு, தேங்காய் எண்ணெய் என்பவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும், மாத காலப்பகுதியில் நலம் (மருத்துவ/மருந்தக உற்பத்திகள் கொள்வனவு அத்துடன் தனியார் வைத்தியசாலைகளுக்கான/சிகிச்சை நிலையங்களுக்கான கொடுப்பனவுகள்), ஓய்வு மற்றும் கலாசாரம் (அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள்), தளபாடம், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு, வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலை, நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகை 2022 ஒத்தோபரில் 0.69 சதவீதம் கொண்ட மாதாந்த அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. எனினும், போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்), துணை வகை 2022 ஒத்தோபரில் குறைவடைந்து உணவல்லா வகையில் ஒட்டுமொத்த மாதாந்த அதிகரிப்பு பாரியளவில் மிதமடைவதற்குப் பங்களித்தது.