ரொனால்டோ 900 கோல்கள் அடித்து சாதனை
உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் போர்த்துகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது விளையாட்டு வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
39 வயதான ரொனால்டோ குரோஷியாவுக்கு எதிரான நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி சார்பில் கோல் அடித்ததன் மூலம் 900 கோல்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் கால்பந்து உலகில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். தனது 900வது கோலை அடித்த அவர் ஆனந்த கண்ணீருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஸ்போர்ட்டிங் லிஸ்பன், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் மற்றும் அல்-நாசர் ஆகிய கழகத்திற்காவும், தனது நாட்டிற்காகவும் சேர்த்து 900 கோல்களை அடித்துள்ளார்.
இதில் தனது தேசிய அணியான போர்த்துகல் அணிக்காக 131 கோல்களை அடித்துள்ளார். இது சர்வதேசப் போட்டிகளில் வீரர் ஒருவர் அடித்த அதிக கோல்கள் ஆகும்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அவர் விளையாடி வருகின்றார்.
ரொனால்டோவின் நீண்ட விளையாட்டு ஆயுட்காலம் என்பது, அவர் தனது முதல் போட்டி கோலை அடித்தபோது ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு இப்போது 21 வயது இருக்கும்.
ரொனால்டோ 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி போர்த்துகலின் ஸ்போர்ட்டிங் கழகத்திற்கான தனது 17 வயதில் எட்டு மாதங்களில் முதல் கோலை அடித்தார்.
இதன் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடிய அவர் இருவேறு காலகட்டங்களில் மொத்தம் 145 கோல்களை அடித்திருந்தார்.
2009ஆம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி அவர் அந்த கழகத்திற்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புகழையும் பெற்றுக்கொண்டார்.
ரியல் மாட்ரிட் அணிக்கான 450 கோல்களை அடித்த அவர், அதன் பின்னர் ஜுவென்டஸ் அணிக்கான 101 கோல்களையும், தற்போது விளையாடும் அல்-நாசர் அணிக்காக 68 கோல்களையும் அடித்துள்ளார்.
இந்நிலையில், 1000 கோல்கள் அடிப்பதை இலக்காக கொண்டுள்ளதாகவும், அதுவரை தொடர்ந்து விளையாட ரொனால்டோ எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரொனால்டோவின் நீண்டகால சக போட்டியாளரான ஆர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி இதுவரை 867 கோல்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.