அண்ணாமலையின் வருகை இதொகாவுக்கு வெற்றியா? தோல்வியா?

அண்ணாமலையின் வருகை இதொகாவுக்கு வெற்றியா? தோல்வியா?

சேவல் கட்சியின் மேதின மேடையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த சம்பவம் அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. சேவல் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றிருக்கும் செந்திலார் இம்முறை மேதினத்தை மாலை, மரியாதை, பொன்னாடையென, பெரும் திரளான மக்களை திரட்டி நிகழ்வை தடபுடலாக, நடத்த உத்தேசித்திருந்தாராம்.
இதற்காக தலவாக்கலை மைதானத்தில் மேதினத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தாராம். தான் கட்சியின் தலைவரானதும் நடக்கும் முதல் மே தினம் என்பதால் “கெத்தை” காட்ட வேண்டிய தேவை செந்திலாருக்கு இருந்ததாம்.

எனினும் மேதினம் தொடர்பான கட்சியின் கலந்துரையாடலின் போது செந்திலாரின் கோரிக்கைக்கு கட்சிக்குள் ஆதரவு கிட்டவில்லையாம்.

தற்போதைய சூழ்நிலையில் இலட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்யக் கூடிய நிலையில் கட்சியின் நிதி நிலைமை இல்லையென கருத்து முன் வைக்கப்பட, நிகழ்வுகளுக்கான செலவை தானே மேற்கொள்வதாக செந்திலார் கருத்து தெரிவித்தாராம்.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் மக்களை திரட்டி தடபுடலாக மேதினத்தை நடத்துவது கட்சிக்கே பாதிப்பாகிவிடும் என ஜீவனார் உட்பட கட்சிக்குள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க இறுதியில் கொட்டகலை சீ.எல்.எப் இல் மேதினத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில், இந்திய அரசியல்வாதிகளுடன் நல்ல உறவை பேணி வரும் செந்திலார் தம்முடைய மேதினத்திற்கு தன்னிச்சையான விருப்பத்தின் பேரில் அழைக்கப்பட்டவர் தானாம் இந்த பா.ஜா.க தமிழக தலைவர் அண்ணாமலை.

இவர் கட்சியின் மேதின நிகழ்வுக்கு அழைக்கப்படுவது கட்சிக்குள் பேசி தீர்மானிக்கப்பட்ட விடயமா? இவரை மேதினத்திற்கு அழைத்தமைக்கு ஏதும் காரணங்கள் உள்ளதா என கட்சிக்குள் விசாரித்தால், செந்திலாரின் விருப்பத்தின் பேரிலேயே அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தாராம், இது தொடர்பில் கட்சிக்குள் பலருக்கு தெரியாதாம்.

ஆக, செந் திலாரின் விருப்பத்தின் பேரிலேயே நிகழ்வுகள் இடம்பெற்றதாம். ஆனால் அண்ணாமலையை மலையகத்துக்கு அழைத்து வந்து மேதின படம் காட்டினாலும் அது பெரிதாக எடுப்படவில்லையாம்.
மூன்று நாள் விஜயமாக வந்த அண்ணாமலையை, யாழ்ப்பாணம், நல்லூர் என பல இடங்களுக்கும் செந்திலார் அழைத்துச் செ றுள்ளார். ஆக, அண்ணாமலையின் வருகை மலையகத்திற்கு எந்த வகையில் நன்மை பயக்க போகின்றது என்பதை அறிய அனைவரையும் போல கழுகாரும் ஆர்வமாக இருக்கிறார்.

(நன்றி - உதயசூரியன் பத்திரிகை)