இந்திய ஊடகங்கள் இலங்கையில் ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் ; கிழக்கு ஆளுநரும் பெருமிதம்

இலங்கையில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு இன்று முதல் முறையாக திருகோணமலையில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்கு இந்திய ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.

இந்திய ஊடகங்கள் இலங்கையில் ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் ; கிழக்கு ஆளுநரும் பெருமிதம்

இலங்கையில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு இன்று முதல் முறையாக திருகோணமலையில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்கு இந்திய ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

“ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சிலம்பம் சண்டை, படகுப் போட்டி, கடற்கரை கபடி போன்றவற்றை நடத்துவோம். பொங்கலுடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன.


தமிழ் சமூகத்துடன் கலாச்சார நிகழ்வுகள் மீட்டெடுக்கப்பட்டதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ANI இடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பொங்கல் நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ANI இடம் கூறியுள்ளார்.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கும் வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு என்பது ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் அறுவடைத் திருவிழாவின் போது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக விளையாடப்படும் ஒரு பிரபலமான விளையாட்டு ஆகும்.

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. 1008 பொங்கல் பானைகள் மற்றும் 1500 பரதநாட்டிய நடனக் கலைஞர்களுடன் பொங்கல் விழாவை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற காளைகள் 'வாடி வாசல்' எனப்படும் மூடிய இடத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக விடுவிக்கப்படும், காளையை அடக்கும் வீரர்கள் காளை பிடித்து பரிசை வெல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே முயற்சி செய்ய அனுமதிக்கப்படுவார். இந்தப் பாரம்பரிய விளையாட்டு ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பதுடன், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக மதுரையில் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருந்து வருகின்றது.

எவ்வாறாயினும், பங்கேற்பாளர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால், விலங்குகள் உரிமை அமைப்புகள் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

2014ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது, ஆனால் 2017ஆம் ஆண்டில், தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை இயற்றியது.

அத்துடன், பங்கேற்பாளர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

எவ்வாறாயினும், தடைக்கு எதிராக மக்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா உச்ச நீதிமன்றம், மே 2023ஆம் ஆண்டு காளைகளை அடக்கும் விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' தமிழகத்தில் அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.