சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

“.. நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும். அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும்.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன். நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்துவதன் மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டாகும் போது குறித்த வருடத்திற்குரிய பரீட்சைகளை அதேவருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.


அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடத்தி முடிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளது..” என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.