எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும் - எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு!

எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும் - எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு!

மாற்றமென்பது மக்களுக்கு நன்மை பயக்ககூடியதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும்." - என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா, அப்கொட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

' பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றது. நாம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கு மட்டுமா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தோம்? இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுத்தோம்.

எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், நானும் அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் இம்முறை பெரும் போராட்டங்கள் இன்றி, சம்பளத்தை பெறக்கூடியதாக இருந்தது.

காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தோம். அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.

சில வேட்பாளர்கள் மக்களுக்கு எதையும் செய்யாததால் தோட்டப்பகுதிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். நாம் சேவை செய்துள்ளதால் உரிமையுடன் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றோம். ஆனால் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என சிலர் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறு குறைகூறுபவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளனர்? ஒன்றும் செய்யவில்லை. மாறாக காங்கிரஸை விமர்சித்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர்.

தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். அதற்கா சில விட்டுக்கொடுப்புகளைக்கூட செய்தோம். அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தினோம். ஆனால் மாற்று தரப்புகள் அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை. மாற்றம் என்பது நமது மக்களுக்கான மாற்றமாக இருக்க வேண்டும். மாறாக நமது பிரதிநிதித்துவத்தை இழந்து மாற்றத்தை தேடினால் அது ஆபத்தில்தான் முடியும்." - என்றார்.