வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை 

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களை அறியும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை (7) கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டபோதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு  குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வீடுகளை சுத்தம் செய்வதற்கும் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், பேரிடர் காரணமாக பகுதியளவில் மற்றும் முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகள், கட்டடங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், அடுத்த நடவடிக்கைகள் உடனடியாக செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களை அறியும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை (7) கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டபோதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு உடனடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகள் தொடர்பில் விசாரித்து, அந்தக் குடும்பங்களுக்கு அதிக இழப்பீடு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019இன் சுற்றறிக்கையின்படி, வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால், நிவாரண முகாமுக்குள் வந்த மக்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், சுற்றறிக்கையை மாற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அதன்படி, அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பணியைத் தொடரக்கூடிய சூழல் உருவாகிறது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தின் பங்களிப்புடன் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருந்துகள் தேவைப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வழிந்தோடிய பின்னர், மக்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களை இதுபோன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். 

மேலும், டெங்கு நோய் பரவும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளோம். அதை எதிர்கொள்ளும் திட்டத்தை தயாரித்துள்ளோம்.

மேலும், இதுபோன்ற வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் இருக்க கையாளக்கூடிய தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியின்றி கட்டுமானம் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனவே, வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் நில மீட்பு பணிகளை நிறுத்த அமைச்சரவை உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனைகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.