கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் ; இன்னும் சற்றுநேரத்தில் ஜனாதிபதி உரை

இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன் அத்தியாவசிய பொது சேவைகளை பேணுவதற்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் ; இன்னும் சற்றுநேரத்தில் ஜனாதிபதி உரை

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு இணக்கத்தை இலங்கை எட்டியுள்ளது.

பாரிஸில் இன்று (26)  நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் இணைத் தலைமைத்துவங்களை வகிக்கும் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்றிருந்தன.

இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன் அத்தியாவசிய பொது சேவைகளை பேணுவதற்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் (OCC) இணைத் தலைவர்களான பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான், அதன் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை என்று அமைச்சர் கூறினார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு OCC செயலகம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இது இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அமைச்சர் தனது X குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் இன்று நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளார். இன்றும் சற்று நேரத்தில் ஜனாதிபதியின் உரை இடம்பெற உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.