விஜயகாந்த் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி


விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழ் திரையுலகின் சாதனையாளர், தனது திறமையான நடிப்பு மூலம் லட்சக்கணக்கானவர்களின் மனங்களை கவர்ந்தார். அரசியல் தலைவராக தமிழகத்தின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதனை நிரப்புவது கடினம்.


அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


விஜயகாந்த் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 'பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்' என்று அஞ்சலி செலுத்துவோம்.

முதல்வர் ஸ்டாலின்


தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான விஜயகாந்த் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான விஜயகாந்த் திரையுலகிலும் பொதுவாழ்விலும் முத்திரைகளைப் பதித்தவர். விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். விஜயகாந்த் உடனான எனது நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.

காங்.,எம்.பி., ராகுல்


தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமா மற்றும் அரசியலில் அவரின் பங்களிப்பு லட்சக்கணக்கானவர்களின் மனதில் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரின் குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்


விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


மத்திய அமைச்சர் எல்.முருகன்


தேமுதிக கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்.


அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ் மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.


சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பிரதமர் பேரன்பைப் பெற்றவர். விஜயகாந்த் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,


விஜயகாந்த காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் மனைவி, குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த விஜயகாந்தை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

விஜயகாந்த் மறைவு செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. என்றாவது ஒரு நாள் குணமடைந்து கேப்டன், மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்தேன்.


விசிக தலைவர்

விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தின் குடும்பத்தினர் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.