பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வடிவேல் சுரேஷ் அழைப்பு!

பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வடிவேல் சுரேஷ் அழைப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை கார் சின்னத்தில் பதுளையில் போட்டியிட இருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியுடன் இணைந்து மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருந்த போதிலும், பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் காலத்தின் தேவையும் உணர்ந்து அதிலிருந்து விலகி தீர்க்கமான தீர்மானம் ஒன்றினை எடுத்து ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாத ஒழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மக்களை அரசியல் அனாதைகளாக மாற்றக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இளைஞர்கள் நம்மோடு இணைந்துள்ளனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பினை நான் நிச்சயமாக உறுதி செய்வேன்.

தமிழ் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை நன்கு அறிந்து மலையக அரசியல் பிரதிநிதிகள் ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும் என பல தருணங்களில் நான் எடுத்துரைத்திருந்த போதிலும் அவை பயனளிக்கவில்லை. அதன் விபரீத விளைவை என்னுடைய தொப்புள்கொடி உறவுகளே அனுபவிக்க நேரிடும் நம்முடைய உரிமைகளுக்கு குரல் எழுப்பவும் பதுளை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரவும் கண்டிப்பாக பதுளையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும்.

அதற்கு நம்முடைய வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ், முஸ்லிம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

என்னிடம் பார் லைசன் இல்லை. லஞ்சம் ஊழல் இல்லை. என்னுடைய கைகள் சுத்தமானவை. நான் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. பகிரங்கமாகவே அழைக்கின்றேன் என்னோடு விவாதத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

யார் தகுதியானவர்? யார் தகுதியற்றவர்? என்று மக்கள் நன்கு அறிவார்கள். நாடாளுமன்றத்தில் உள்ளேயும் சரி வெளியேயும் சரி மக்களுக்காக களத்தில் இருந்து தொடர்ந்து போராடி இருக்கின்றேன். மக்களின் உணர்வோடும் உறவோடும் கலந்தவன் நான். ஆகவே, மக்களின் பொன்னான வாக்குகளை சிதறடிக்க சதித்திட்டம் தீட்டாமல் மக்களின் நலனை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.” என்றும் அவர் கூறியுள்ளார்.