இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி

எண்ணப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். ஜலிலி 44.3% வாக்குகளைப் பெற்றார்.

இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி

இரானின் புதிய அதிபராக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலியை தோற்கடித்து அதிபராகி உள்ளார்.

எண்ணப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். ஜலிலி 44.3% வாக்குகளைப் பெற்றார்.

ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில், எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில், 40% என்ற அளவில் வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது.

இரானின் முந்தைய அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் இரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, டாக்டர் பெசெஷ்கியனின் ஆதரவாளர்கள் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் தெருக்களில் இறங்கி கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் பெரும்பாலும் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் நடனமாடுவதையும், அவரது பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சைக் கொடியை ஏந்திச் சாலைகளில் நடப்பதையும் பார்க்க முடிந்தது.

71 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இரானிய நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பெசெஷ்கியன், இரானின் மோசமான 'அறநெறி போலீஸ்' பிரிவை விமர்சித்து, உலகத்திலிருந்து இரானின் 'தனிமைப்படுத்தலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பதற்கும் 'ஒற்றுமை மற்றும் ஒத்திசைவு' பண்புகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்ததன் மூலம், அவரது பிரசாரம் பரபரப்பை உருவாக்கியது.

மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தளர்த்துவதற்கு ஈடாக இரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் தொடர்பாக மேற்கத்திய சக்திகளுடன் 'ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு' டாக்டர் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட சயீத் ஜலிலி, இரானின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர். முன்னாள் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜலிலி, இரானின் பெரும்பாலான மத சமூகங்கள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார்.

ஜலிலி தனது உறுதியான மேற்கத்திய எதிர்ப்புக் கருத்துக்களுக்காகவும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிராகரித்ததற்காகவும் நன்கு அறியப்பட்டவர், அவர் இரானின் 'சிவப்புக் கோடுகளை' உடைத்ததாகக் கூறுகிறார்.

சமீபத்திய வாக்கெடுப்பில் 50% வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த வாரத்தின் முதல் சுற்று வாக்குப்பதிவை விட அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவியதால் முதல் சுற்றில் மிகக்குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. 1979-இல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் குறைந்த வாக்குகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

பரவலான அதிருப்தியால் மில்லியன் கணக்கான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

இரான் தேர்தல்களில் முதன்மை வேட்பாளர்களாக இஸ்லாமிய கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் யாரை தேர்வு செய்வது என்று மக்களின் விரக்தி அதிகரித்தது, மேலும் உச்ச தலைவர்கள் கொள்கையை கடுமையாக நெறிப்படுத்தும் வரை அர்த்தமுள்ள சீர்திருத்தம் சாத்தியமற்றதாகவே இருக்கும் என்று மக்கள் கருதினர்.

தேர்தலில் முதல் சுற்றில் வாக்களிக்காத சிலர், ஜலிலி அதிபராக வருவதைத் தடுக்க இந்த முறை டாக்டர் பெசெஷ்கியனுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது.

ஜலிலி வெற்றி பெற்றால், இரான் வெளி உலகத்துடன் மேலும் மோதல் நடவடிக்கைகளை நோக்கிச் செல்லும் என்றும், அவர் இரானுக்குக் கூடுதல் தடைகளை கொண்டு வந்து மேலும் நாட்டை தனிமைப்படுத்துவார் என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.

இரு வேட்பாளர்களும் இரானில் உள்ள 12 மதகுருமார்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க குழுவான கார்டியன் கவுன்சிலால் (Guardian Council) நிர்வகிக்கப்படும் தேர்வு நடைமுறையில் தேர்ச்சி பெற வேண்டும்.

அந்தச் செயல்முறையின் போது, கார்டியன் கவுன்சில் பல பெண்கள் உட்பட 74 வேட்பாளர்களை போட்டியில் இருந்து நீக்கியது.

அதிகாரத்திற்குப் போதுமான விசுவாசத்தை வெளிப்படுத்தாத வேட்பாளர்களை நீக்கியதற்காக கார்டியன் கவுன்சிலை மனித உரிமை அமைப்புகள் பலமுறை விமர்சித்துள்ளன.

2022-2023-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் பேரணிகள் உச்சக்கட்டத்தை அடைந்த உள்நாட்டு அமைதியின்மையின் போது ஏராளமான நடுத்தர வர்க்க மற்றும் இளம் இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது வலுவான பகைமையைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் வரலாற்று ரீதியாக வாக்களிப்பதில் இருந்து விலகினர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு - 2022-23-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தது - பல இளம் மற்றும் நடுத்தர வர்க்க இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்க மறுத்து வந்தனர்.

இரானிய சமூக ஊடகங்களில் , 'traitorous minority' என்ற பாரசீக ஹேஷ்டேக் வைரலானது, எந்தவொரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை அந்தஇ பதிவுகள் வலியுறுத்தியன. வாக்களிக்கும் மக்களை 'துரோகிகள்' என்று குறிப்பிட்டன.

மறுபுறம், தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பது டாக்டர் மசூத் பெசெஷ்கியனின் ஆட்சியை நிராகரிப்பதைக் குறிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளார்.

"இரான் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவுக்குப் பின்னால் முக்கியமான காரணங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் சமூகவியலாளர்கள் அவற்றை ஆய்வு செய்வார்கள். ஆனால் வாக்களிக்காதவர்கள் ஸ்தாபனத்திற்கு எதிரானவர்கள் என்று யாராவது நினைத்தால், அது தவறு," என்று அவர் கூறினார்.

சில இரானியர்கள் தற்போதைய ஆட்சியை ஏற்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "நாங்கள் மக்கள் சொல்வதைக் கேட்போம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது," என்று கமேனி கூறினார்.