கம்பனிகாரர்களுடன் டீல் - 1700 ரூபா ஏன் கிடைக்கவில்லை? இரவு மதுசார விருந்தில் கலந்துகொண்டு குதூகலம்

கம்பனிகளுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் முக்கிய தரப்பாக இருக்கும் தொழிற்சங்கமொன்றுக்கும் இடையில் பல்வேறு ரகசிய உடன்பாடுகள் இருப்பதாக தெரியவருகிறது.

கம்பனிகாரர்களுடன் டீல் - 1700 ரூபா ஏன் கிடைக்கவில்லை? இரவு மதுசார விருந்தில் கலந்துகொண்டு குதூகலம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (04.067.2024) பிறப்பித்திருந்தது.

சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உட்பட 21 பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தியே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் கிடைக்காது போயுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தொழிலாளர்கள் இன்று மனமுடைந்து போயுள்ளனர்.

கம்பனிகளுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் முக்கிய தரப்பாக இருக்கும் தொழிற்சங்கமொன்றுக்கும் இடையில் பல்வேறு ரகசிய உடன்பாடுகள் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த வழக்கு முடிந்த கையோடு பொகவந்தலாவ பிளான்டேஷனின் முகாமையாளர் வழங்கிய இரவு மதுசார விருந்துபசாரத்தில் இந்த முக்கிய தொழிற்சங்கத்தின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது. 

தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது போல் நாடகமாடிவிட்டு கம்பனிகளுடன் டீலில் இருப்பதை தொழிலாளர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

சம்பள அதிகரிப்பு இடம்பெற்ற தருணத்திலேயே இதனை ஒரு நாடகம் என்று பலதரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் குடி கும்மாலத்துடன் இவர்கள் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துள்ளமையை கண்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் வகித்துக்கொண்டு மக்களுக்கு எதனையும் செய்யாது கம்பனிகாரர்களுடன் உறவுகளை வைத்துக்கொண்டு இவ்வாறு தொழிலாளர்களை காட்டிக்கொடுப்பதை தொழிலாளர்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள். 

கம்பனிக்காரர்களுடன் இவர்கள் உறவில் இருப்பதும் அடிக்கடி மது விருந்துகளில் கலந்துகொண்டு ரகசிய உறவுகளை பேணி அவர்கள் வழங்கும் அற்ப சொற்ப நலன்களை பெற்றுக்கொண்டு ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் காட்டிக்கொடுக்கின்றனர். 

மக்கள் இத்தகைய மோசமான அரசியல்வாதிகள் தொடர்பில் விழிப்புணர்வை அடைய வேண்டும். இவர்கள் போன்றவர்களால் தொழிற்சங்க அரசியலில் ஈடுபடும் மூத்த தலைவர்களின் கௌரவமும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. 

தொழிலாளர்களை பகடைக்காயக பயன்படுத்தி அவர்களை வைத்தே நன்மைகளை பெற்று பதவிகளையும் வகித்துக்கொண்டு கம்பனிகளுடன் இவ்வாறு ரகசிய உறவுகளை பேணுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பு என தொழிலாளர்கள் கவலையடைகின்றனர். 

இவர்கள் போன்றோரின் உண்மையான முகத்தை தொழிலாளர்கள் உணரும் காலம் விரைவில் வரும். 

இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.