மலையக, வட-கிழக்கு, கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மனோ கணேசன் விசேட அழைப்பு
நாடு முழுக்க வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு, தரக்கூடிய நடைமுறை சாத்தியமான தீர்வுகளை, இந்த ஜனாதிபதி தேர்தல் வேளையில் மிக தெளிவாக அறிவித்துள்ள ஒரே வேட்பாளர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச மட்டுமே.
எம்முடன் போட்டியில் இருப்பவர்கள், இரண்டு வருடம் அதிகாரத்தில் இருந்து விட்டு, இனப்பிரச்சினை தீர்வுக்கு காத்திரமாக எதுவும் செய்யாமல், தமிழ் பேசும் அரசியல்வாதிகளுக்கு முறையற்ற “பர்மிட்” சலுகைகளையும், லஞ்சமும் கொடுத்து ஆள் பிடிப்பவர் யாரென தேடி பாருங்கள். இனவாத சிந்தனையை இந்நாட்டில் ஊட்டி வளர்த்ததில் தமக்குள்ள பங்கை மறந்து விட்டு, இன்று திடீர் என தமிழ் பேசும் மக்கள் மீது பாசம் காட்டும் நபர்கள் யாரென தேடி பாருங்கள்.
எனவே, எங்களை நம்பி தைரியமாக சென்று தொலைபேசி சின்னத்துக்கு வாக்களியுங்கள், என கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணின் விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமது உரையில் மனோ கணேசன் எம்பி கூறி உள்ளதாவது;
வரலாற்றில் மிக முக்கியமான கால கட்டமான இன்றைய வேளையில் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அணி திரண்டு சென்று தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்க மிக தெளிவான காரணங்கள் இருக்கின்றன. மலையக தமிழ் மக்கள், வட கிழக்கு தமிழ் மக்கள், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஆகிய அனைவருக்கும் இதை நான் மிக தெளிவாக கூறி வைக்க விரும்புகிறேன்.
மலையக தமிழ் மக்கள்
இந்நாட்டில் நாம் எமது இறுதி கட்ட குடியுரிமையை 2003ம் ஆண்டில்தான் பெற்றோம். அதாவது, ஓட்ட பந்தயத்தில் கடந்த 20 வருடங்களாகதான் நாம் ஓடிக் கொண்டு இருக்கிறோம். இந்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்கத்தான் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவானது. அதன் அடையாளமாக, இந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி, வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாச உடன் நாம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளோம். சகோதர ஈழத்தமிழ் வரலாற்றில் பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு சமனான, மலையக வரலாற்று ஒப்பந்தமே இந்த தமுகூ-சஜித் ஒப்பந்தம்..!
தோட்ட தொழில் துறையில் “சிஸ்டம்-சேன்ஜ்” என்ற முறை-மாற்றம், விவசாய காணி, தோட்டத்தில் வாழும் அனைவருக்கும் வீட்டு காணி என்ற எமது காணி உரிமையை இந்த உடன்படிக்கை உறுதி செய்கிறது.
எம்மை எதிர்ப்போர் யார்? சற்று உற்று பாருங்கள். கடந்த ஐம்பது வருடங்களாக ஏறக்குறைய எல்லா அரசாங்கங்களிலும் அங்கம் வகித்து விட்டு, இப்போதும்கூட எதுவும் செய்யாமல், வெறும் வாய் சவடால் மட்டும் அடிக்கும் ஒரு பிற்போக்கு கும்பல். இன்னொன்று, மலையக மக்கள் காணி உரிமை பெறுவதை தடுக்கும் இனவாத சிந்தனையை இந்நாட்டில் ஊட்டி வளர்த்ததில் இவர்களுக்கும் இருந்த பங்கை மறந்து விட்டு, இன்று மலையக மக்கள் மீது திடீர் பாசம் கொண்டுள்ள நபர்கள்.
வட கிழக்கு தமிழ் மக்கள்
2009 ஆண்டு போர் முடிவுக்கு பின், “அமெரிக்கா வரும், ஐரோப்பா வரும், ஐநா வரும், சர்வதேசம் வரும், உலகமே உதவிக்கு வரும்”, என்று நாம் 2024 வரை தந்த 15 ஆண்டு கால அவகாசத்தில் எவருமே வரவில்லை. தமது தேச நலன்களை மாத்திரம் கணக்கில் எடுக்கும் உலக ஒழுங்கில் எமது பிரச்சினை பின்னாலே போய் விட்டது.
இன்று அரசியல் யாப்பில் இருக்கும் 13ம் திருத்தத்தை அமுல் செய்து, நீண்ட காலமாக நின்று போய் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை நடத்தி, முதல் கட்டமாக வடக்கு, கிழக்கிலே மாகாண சபைகளை மீள உருவாக்கி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர, எமக்கு மூச்சு விடும் விதமாக தெளிவான உறுதியை தந்துள்ள வேட்பாளர் யார் என தேடி பாருங்கள்.
இரண்டு வருடம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டு, எதுவுமே செய்யாமல், இன்று வந்து வாய் சவடால் அடிக்கும் நபர் யார் என தேடி பாருங்கள்..! தமிழ் அரசியல்வாதிகளுக்கு முறையற்ற “பர்மிட்” சலுகைகளையும், லஞ்சமும் கொடுத்து ஆள் பிடிப்பவர் யாரென தேடி பாருங்கள். இனவாத சிந்தனையை இந்நாட்டில் ஊட்டி வளர்த்ததில் தமக்குள்ள பங்கை மறந்து விட்டு, இன்று திடீர் என தமிழ் மக்கள் மீது பாசம் காட்டும் நபர்கள் யாரென தேடி பாருங்கள்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள்
மேல் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட மக்கள், மலையக, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இங்கே இடம் பெயர்ந்துள்ள மக்கள், எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகள் இரண்டு.
ஒன்று, சொந்த வீடில்லா நிலைமை, சொந்த வீடு இருந்தும் ஒரே வீட்டுக்கு உள்ளே, பல குடும்பகள் ஒடுங்கி வாழ வேண்டிய நிலைமை, சொந்த வீட்டு கனவுடன் வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டிலேயே வாழும் நிலைமை. இரண்டாவது, தம் குழந்தைகளின் கல்விக்காக தகைமையுள்ள பாடசாலைகளை தேடி அலையும் நிலைமை. பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய போதனைகளையும், ஆசிரியர்களையும் கொண்டிராத நிலைமை, இதனால் தமது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெற முடியாத நிலைமை.
வீடில்லாத குடும்பங்களுக்கு சொந்த வீடு வழங்கும், தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் கொள்கையை, சஜித் தன்னுள்ளே இயல்பாகவே கொண்டுள்ளார். எதிர் கட்சி தலைவராக இப்போதே, பாடசாலைகளுக்கு உதவிகள் செய்து சஜித் பிரேமதாச சாதனை படைத்துள்ளார். வீடு, பாடசாலை தொடர்பாக, தெளிவான உறுதியை தந்துள்ள சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னத்துக்கு தைரியமாக சென்று வாக்களியுங்கள்..!