இலங்கை – தென்கொரியா இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

இலங்கை – தென்கொரியா இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தத் திட்டம்

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தென்கொரிய குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுய்-ஹே சிசிலியா சுங்குடன் (Eui-Hae Cecilia Chung) சியோல் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

சியோலில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இதன்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார மீட்சித் திட்டங்களுக்கு இணையாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விசேட கவனம் செலுத்தினர்.

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, தென்கொரியா வழங்கிய காலோசிதமான மற்றும் அவசர உதவிகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இதன்போது தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், அனர்த்தங்களுக்குப் பின்னரான இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் தேசிய முயற்சிகளுக்குத் தென்கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் இதன்போது கோரினார்.

குறிப்பாக, இலங்கைத் இளைஞர்களிடையே தென்கொரிய கலாச்சாரம் பெற்றுள்ள வரவேற்பும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் சமூக மற்றும் கலாச்சாரப் பிணைப்பும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டு (2027), இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைச் சிறப்பிக்கும் வகையில், அந்த மைல்கல்லைக் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட விஜயங்களை முன்னெடுப்பதற்கும், நிறுவன ரீதியான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான பங்காளித்துவத்தை ஒரு புதிய கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான தமது கூட்டு உறுதிப்பாட்டை இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.