தோட்டத் தொழிலாளர் கொடுப்பனவுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க அறிவுறுத்தல்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் நாளாந்த வரவுக் கொடுப்பனவுக்குச் சட்டப்பூர்வமான பின்னணியை உருவாக்குமாறு அரச நிதிப் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இடம்பெற்ற நிதிப் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்கு நிதிப் பற்றியக் குழு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
எனினும், இந்தக் கொடுப்பனவை வழங்கும் முறைமை தொடர்பான சட்டப்பூர்வமான நிலைமை குறித்துக் கட்டாயம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய நிதி ஒழுக்கமின்றி அரச நிதியைப் தனியார் நிறுவனங்களின் சம்பளம் வழங்குவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் இன்றி தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
ஆகவே, இதனை எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த 200 ரூபாய் தொகை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் மூன்று வருடங்களுக்குச் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்தக் காலக்கெடு நிறைவடைந்த பின்னர் இந்தக் கொடுப்பனவை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Editor