வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகளுக்கு முழுமையான விடுதலை
வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் கீழ் 3,200 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளுக்கு முழுமையான விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தவா்களும் இச்சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய வெனிசுலா பாராளுமன்ற சிறப்புக் குழுத் தலைவா் ஜோர்ஜ் அர்ரியாசா, பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முதல் கட்டமாக இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நான்கு நாட்களில் 3,052 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு சிறையில் இருந்த 179 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தலைமையிலான புதிய அரசு, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்தது. அதற்கேற்ப இந்த விடுதலைகள் இடம்பெறுகின்றன.எனினும், கொலை, போதைப்பொருள் கடத்தல், இராணுவக் கிளா்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு இந்த பொது மன்னிப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
Editor