தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆவணத்துக்கு சஜித் மதிப்பளிக்கவில்லை 

“ சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வர வேண்டும்.” – என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆவணத்துக்கு சஜித் மதிப்பளிக்கவில்லை 

“ சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வர வேண்டும்.” – என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 46 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் வெத்து வேட்டு எனவும், அதனை சஜித் பிரேமதாச திருப்பிகூட பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,

“ நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார். அதனால்தான் சுயாதீனமாக வெளியேறி அவரை ஆதரிக்கும் முடிவை , நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் கருதி எடுத்துள்ளேன்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள கடன் பொருளாதார மீட்சிக்கு பக்கபலமாக உள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என எதிரணிகள் கூறுகின்றன. அவை எவ்வாறான நிபந்தனைகள் எனக் கூறமுடியுமா?இது தொடர்பில் எதிரணிகளிடம் தெளிவான பதில் இல்லை.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இது நகைச்சுவைத்தனமான ஆவணமாகும்.வற் வரியை நீக்கப்போகின்றார்களாம். சரி,வற் வரியை நீக்கினால் வருமான வழிமுறைகளை குறிப்பிட முடியுமா? எனவே, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதத்துக்கு வருமாறு சஜித், அநுர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
அதேபோல நாட்டை மீண்டும் வரிசை யுகத்தை நோக்கி தள்ள வேண்டாம் என இருவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதேவேளை, நுவரெலியாவில் பிரதேச செயலக பிரிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய அனுமதியை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தவேளையிலேயே வழங்கினார். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் அவை நிச்சயம் மேம்படுத்தப்படும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி ஆவணமொன்றை தூக்கிக்கொண்டு திரிகின்றது. 40 அம்ச கோரிக்கையாம், 46 அம்ச கோரிக்கையாம். ஆமாம், புத்தகமாக வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அதற்குள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பது சஜித்துக்குகூட தெரியாது. அந்த ஆவணத்தை அவர் திருப்பிகூட பார்க்கவில்லை.
ஆனால் மலையக மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவர் ஜனாதிபதியான பின்னர் பல திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம். தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்தவாரம் சம்பளம் கிடைத்த பிறகு மேலும் இரு மலையக எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.