40 நிலையங்களில் இந்திய ஆசிரியர்களால் பயிற்சி!

பத்து வாரகால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த மையங்களில் மெய்நிகர் ஊடாகவும் இணைந்துகொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

40 நிலையங்களில் இந்திய ஆசிரியர்களால் பயிற்சி!

பத்து வாரகால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த மையங்களில் மெய்நிகர் ஊடாகவும் இணைந்துகொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பயிற்சி ஆசிரியர்களின் பயிற்சித்திட்டம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினது இலங்கை வருகையின் 200ஆண்டுகளை பிரதானமாகக் கொண்டு 750 மில்லியன் ரூபா பல்துறை இந்திய நன்கொடை உதவியின் கீழ் பெருந்தோட்ட பிராந்தியங்களிலுள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஜூலையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதன்படி இயற்பியல், வேதியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் உயிரியல் ஆகிய பாடத்துறை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, கல்வி அமைச்சு, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தியாவின் ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இலங்கையின் பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நிபுணத்துவம் பெற்ற 19 ஆசிரியர்கள் ஜூலை மாதம் 21ஆம் திகதி இலங்கை வந்தனர். பின் 22 முதல் ஆகஸ்ட் 2 வரை, நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றால் நங்கூரமிடப்பட்ட புத்தாக்க ஈடுபாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில் இரு அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான தீவிர கலந்துரையாடல்கள், மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் பெருந்தோட்ட பிரதேசங்களில் ஆறு பாடசாலைகளை உள்ளடக்கிய களப்பயணங்கள், தேசிய கல்வி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டமைக்கப்பட்ட அறிமுக நிகழ்ச்சித்திட்டம் ஆகியவை அடங்கும்.

பாடத்திட்டத்தை மீளாய்வு செய்தல், விசேட மனிதவள, உட்கட்டமைப்பு தேவைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுபேறுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் பற்றிய ஆழமான புரிதலை பெற்றுக்கொள்ளல், இலங்கையின் கல்வி முறைமை மற்றும் கற்பித்தல் நுட்பங்களை புரிந்துகொள்ளல், இந்திய பாடத்திட்டத்தில் உள்ள வேறுபாடுகளை அடையாளம் காணுதல், வெற்றிகரமான நிகழ்ச்சித்திட்டமொன்றை உறுதிப்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால யுக்திகளை வகுத்தல் ஆகியன இந்த நோக்குநிலை ஈடுபாடுகளின் மையமாக இருந்தன.

10 வார ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இவ் ஆசிரியர்கள் பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளில் பணிமயப்படுத்தப்படுவர். பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் இந்திய பயிற்சியாளர்களை அதிகபட்சமாக பயன்படுத்துவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பரவியுள்ள சுமார் 40 நிலையங்களில் ஆசிரியர்கள் நேரில் பயிற்சி அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். அதே நேரத்தில் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த சில மையங்களில் மெய்நிகர் முறையில் இணைவர்.

இத்திட்டம் வெற்றிகரமாக முடிவடையும் போது பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்திருப்பர்.

இலங்கை மக்களின் கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், வாழ்வாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளில் அரசாங்கத்தின் அபிவிருத்திக் கூட்டாண்மை முயற்சிகளின் நீண்ட பட்டியலில் இந்த பயிற்சி திட்டம் இணைகிறது.