பட்ஜட்டுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நுவரெலியாவில் போராட்டம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் நேற்று (23) திங்கட்கிழமை நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டன.
தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இன்றைய தினத்தில், நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் தமது தொழில் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக தாதியர்கள் போராட்டம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக தாதியர் சங்கத்தினர் நேற்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தமக்குக் கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தெரிவித்தனர்.
எனவே, இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு அல்லது வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
Editor