24 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் 24 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய 24 மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கடுமையான மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் உடைமைச் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகள், வயல்வெளிகள் மற்றும் உயரமான இடங்களில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Editor