டொரிங்டன் தமிழ் வித்தியாலயம் மீண்டும் சாதனை - க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 90% ஒட்டுமொத்தச் சித்தி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் டொரிங்டன் தமிழ் வித்தியாலயம் மீண்டும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இவ்வாண்டு நடைபெற்ற பரீட்சையில், பாடசாலை மொத்தமாக 90% சித்தி வீதத்தைப் பதிவு செய்து தனது கல்வித் தரத்தையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சைவ சமயம், கணிதம், சங்கீதம், சித்திரம், குடியியல் கல்வி மற்றும் சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களில் 100% சித்தி வீதம் பெறப்பட்டிருப்பது பாடசாலையின் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.
மேலும் தமிழ் மொழியில் 95%, விஞ்ஞானத்தில் 95% மற்றும் வரலாற்றில் 90% என்ற உயர்ந்த பெறுபேறுகளும் பதிவாகியுள்ளன. இப்பெறுபேறுகள் பாடசாலையின் கல்வித் தரத்தையும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆங்கிலப் பாடத்தில் 47% பெறுபேறு பதிவாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் அனைத்து பாடங்களிலும் மேலும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பாடசாலையின் மாணவரான V. எடிஸ்வரன் 6A, 1B, 2C என்ற சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றியின் பின்னணியில் பாடசாலை அதிபரின் சிறந்த நிர்வாகமும், ஆசிரியர்களின் அயராத உழைப்பும், மாணவர்களின் விடாமுயற்சியும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அதிபர் திரு. காந்திபன் இந்த வரலாற்றுச் சாதனைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்திலும் இதைவிட உயர்ந்த கல்விச் சாதனைகளை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் இந்தப் பெருமைக்குரிய சாதனைக்கு காரணமான அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Editor