காங்கோ அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர் சாமுவேல் முத்துசாமி

காங்கோ அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி வீரர் சாமுவேல் முத்துசாமி

சாமுவேல் முத்துசாமி (Samuel Moutoussamy) என்ற தமிழ் வம்சாவளி கால்பந்து வீரர், 2026 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் காங்கோ (Democratic Republic of the Congo) அணிக்காக விளையாடி தமிழ் சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவின் Houston நகரில் நடைபெற்ற ‘கே’ பிரிவு ஆட்டத்தில் போர்த்துகல் (Portugal) அணியை எதிர்த்து காங்கோ அணி களமிறங்கியபோது, சாமுவேல் முத்துசாமி தொடக்க அணியில் (Starting XI) இடம்பெற்றிருந்தார்.

29 வயதான நடுகள வீரரான அவர், பாரிஸ் நகரில் பிறந்தவர். அவரது தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை குவாதலூப்பு (Guadeloupe) தீவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து குவாதலூப்புக்கு குடிபெயர்ந்த தமிழர்களின் சந்ததியினராக அவர் கருதப்படுகிறார்.

2019ஆம் ஆண்டு முதல் காங்கோ தேசிய அணிக்காக விளையாடி வரும் முத்துசாமி, 50க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டுள்ளார். தனது அமைதியான நடுகள ஆட்டத்தாலும், பந்துக் கட்டுப்பாட்டுத் திறமையாலும் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் காங்கோ அணியின் பங்கேற்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஏனெனில், காங்கோ அணி இதற்கு முன்பு 1974ஆம் ஆண்டு மட்டுமே உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றிருந்தது. 

சுமார் 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மேடைக்கு திரும்பியுள்ள அந்த அணி, தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் கோலையும் இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.

தமிழ் வேர்களைக் கொண்ட ஒரு வீரர் உலகின் மிகப்பெரிய கால்பந்து மேடையான உலகக் கோப்பையில் காங்கோ அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகிறது.