டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்?

டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை அணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாக அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை GMR மற்றும் JSW நிறுவனங்கள் மாறி மாறி நடத்தும் முறையில் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் GMR நிறுவனம் அணியை நிர்வகித்த நிலையில், 2027 முதல் அடுத்த கட்ட நிர்வாக பொறுப்பை JSW நிறுவனம் ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய நிர்வாக மாற்றத்தையடுத்து, JSW நிறுவனத்தின் கீழ் டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள சௌரவ் கங்குலியின் பரிந்துரைக்கு அமையவே யுவராஜ் சிங் பயிற்றுவிப்பாளர் குழுவில் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு IPL தொடர்களில் அக்சர் பட்டேல் தலைமையில் களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறத் தவறியிருந்தது. இதன் பின்னர் அணியின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்றுவிப்பாளர் அமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹேமங் பதானியின் பதவிக்கு சவால் உருவாகியுள்ள நிலையில், அணியை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.