கார் மோதியதால் 16 வயது மாணவன் பலி

கார் மோதியதால் 16 வயது மாணவன் பலி

கொழும்பு, கொஹுவலை பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுக் கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் மீது மோதியதால் அவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (23) கொஹுவலை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.

நுகேகொடையிலிருந்து கொஹுவலை நோக்கிப் பயணித்த கார் ஒன்றின் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தே இவ்வாறு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவர் மீது மோதியுள்ளது.

முதலில் குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மற்றுமொரு காருடனும் மோதிய பின்னர், அருகிலிருந்த பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவன் மீது மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதான வீதிக்குத் திரும்பிய கார், மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வேன் ஆகியவற்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நுகேகொடையைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொஹுவலை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த காரின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.