நாட்டின் காற்றின் தரத்தில் முன்னேற்றம்
நாட்டின் காற்றின் தரத்தைப் பாதித்த இந்தியாவிலிருந்து வீசிய மாசடைந்த காற்று வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கத்தால் நாட்டை விட்டு விலகியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்திருந்த காற்று மாசடைவு தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது.
கடந்த நாட்களில் காற்றுத் தரச் சுட்டெண் (AQI) 200 வரை அதிகரித்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) அது சுமார் 50 ஆகக் குறைந்துள்ளது.
காற்றுத் தரக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ளது. எனினும், சில பகுதிகளில் காற்று மாசடைவு தொடர்ந்து காணப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தின் பத்தரமுல்ல பகுதியில் காற்றுத் தரச் சுட்டெண் 92 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதியில் 119 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவானது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ள நிலையாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் காற்று மாசடைவு அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றுத் தரச் சுட்டெண் 200 வரை உயர்ந்திருந்தது.
தற்போது வடகிழக்குப் பருவக்காற்றின் தாக்கத்தால் மாசடைந்த காற்று நாட்டை விட்டு நகர்ந்துள்ளதால் ஒட்டுமொத்தமாகக் காற்றின் தரம் முன்னேற்றமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Editor