பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 36 சதவீதத்தால் அதிகரிப்பு 

பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 36 சதவீதத்தால் அதிகரிப்பு 

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர்களுக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் 36 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு 139 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சம்பள உயர்வு இன்று (நவம்பர் 25) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 12,500 டாக்காவாக (சுமார் 102 அமெரிக்க டொலர்) காணப்படும் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 17,000 டாக்காவாக (139 அமெரிக்க டொலர்) உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் கோரி பல வாரங்களாக ஆடைத் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டங்களால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதுடன், நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டு உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றன.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை, தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சுமார் 12 மணிநேர பேச்சுவார்த்தையின் பின்னர், இன்று அதிகாலை 2 மணியளவில் புதிய சம்பளக் கட்டமைப்புக்கு ஒப்புதல் வழங்கியது.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் தொழிலாளர் தரப்பிலிருந்து இருவரும், தொழிற்சாலை உரிமையாளர்கள் தரப்பிலிருந்து இருவரும் உள்ளிட்ட உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இறுதியாக, 17,000 டாக்கா குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் தீர்மானத்திற்கு நான்கு உறுப்பினர்கள் ஆதரவளித்ததுடன், தொழிலாளர்களின் 18,000 டாக்கா கோரிக்கைக்கு இருவர் ஆதரவளித்தனர்.

புதிய சம்பளக் கட்டமைப்பின்படி, தொழிலாளர்கள் நான்கு தரங்களாகப் பிரிக்கப்பட்டு மாதாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்காம் தரத் தொழிலாளர்கள் – 17,000 டாக்கா

முதலாம் தரத் தொழிலாளர்கள் – 21,500 டாக்கா

நான்காம் தரத் தொழிலாளர்களுக்கான புதிய சம்பளம், 2023ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை விட 4,500 டாக்கா அதிகமாகும்.

எனினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை வழங்கப்பட்டுள்ள 36 சதவீத அதிகரிப்பு மிகக் குறைந்த உயர்வாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு 56 சதவீதமும், 2018ஆம் ஆண்டு 51 சதவீதமும், 2013ஆம் ஆண்டு 77 சதவீதமும் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

பங்களாதேஷின் ஆடை உற்பத்தித் துறையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை இந்தத் துறை வழங்கி வருகிறது.

மேலும், H&M, Zara, Walmart, Target மற்றும் Gap போன்ற சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கும் பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலைகள் பொருட்களை விநியோகித்து வருகின்றன.

தொழிலாளர் போராட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை மாத்திரம் 397 தொழிற்சாலைகளால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 84 தொழிற்சாலைகள் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள 'வேலை இல்லை என்றால் சம்பளமும் இல்லை' என்ற விதிமுறையின் அடிப்படையில் மூடப்பட்டிருந்தன.

18 நாட்கள் நீடித்த உற்பத்தித் தடையால் 317 தொழிற்சாலைகளுக்கு சுமார் 428 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 254 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடை உற்பத்தி ஆணைகளை சர்வதேச கொள்வனவாளர்கள் பிற நாடுகளுக்கு மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சம்பள உயர்வு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமா?

தொழிற்சாலை உரிமையாளர்கள் தரப்பில், மேலும் சம்பளத்தை அதிகரிப்பது உற்பத்திச் செலவுகளை உயர்த்தி சர்வதேச சந்தையில் பங்களாதேஷின் போட்டித்தன்மையைப் பாதிக்கும் எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மறுபுறம், தொழிலாளர் உரிமைகள் அமைப்புகள், தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான சம்பள உயர்வு அவசியம் என வலியுறுத்துகின்றன.

புதிய சம்பளக் கட்டமைப்பு எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி, அதிகரிக்கப்பட்ட சம்பளத்தைத் தொழிலாளர்கள் ஜனவரி மாதம் முதல் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தொழிலாளர்கள் கோரிய சம்பள உயர்வை விடக் குறைவான தொகையே இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் தொழிலாளர் போராட்டங்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆதாரம்: ரொய்ட்டர்ஸ் (Reuters)