குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டனுக்கு 1.3 இலட்சம் ரூபா அபராதம் 

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டனுக்கு 1.3 இலட்சம் ரூபா அபராதம் 

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன், குறித்த வாகனத்தை அரசுடைமையாக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாத கால எளிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுக்காக ஒரு மாத கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.