வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இலவசக் குடியுரிமை - கம்மன்பில எதிர்ப்பு

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இலவசக் குடியுரிமை - கம்மன்பில எதிர்ப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கும், தகுதியுடையவர்களுக்கு இலவசக் குடியுரிமை வழங்கும் திட்டத்திற்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் தேசிய பாதுகாப்புக்கும் எதிர்காலத் தேர்தல் முடிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான முன்மொழிவுக்கு எதிராகத் தனது கட்சி 13 அம்சங்களைக் கொண்ட ஆட்சேபனைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் இடம்பெற்றுள்ள, இலங்கையின் முன்னாள் குடிமக்களின் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சந்ததியினருக்கு இலவசக் குடியுரிமை வழங்கும் 'உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடியுரிமை' திட்டத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த இரு முன்மொழிவுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் பேருக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடிய நிலை உருவாகும் என்றும், இது விரிவுபடுத்தப்பட்ட வாக்காளர் தொகையில் சுமார் 25 சதவீதமாக அமையலாம் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளில் வெளிநாட்டு வாக்காளர்களின் தாக்கம் குறித்து கவலை

வெளிநாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சில பிரிவுகளுடன் விடுதலைப் புலிகள் அமைப்பு பல தசாப்தங்களாகத் தொடர்பு வலையமைப்புகளைப் பேணி வந்ததாகக் கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்குவது, பிரிவினைவாதக் கொள்கைகளுக்கு ஆதரவான குழுக்களின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டில் அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு குறைவடைந்து வருவதால், வெளிநாட்டு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கம்மன்பில முன்வைக்கும் ஆறு முக்கிய ஆட்சேபனைகள்

வெளிநாட்டு வாக்குரிமைத் திட்டம் தொடர்பில் தனது கட்சி கொண்டுள்ள எதிர்ப்புக்கான காரணங்களாக அவர் ஆறு விடயங்களை முன்வைத்துள்ளார்.

  1. தேர்தல் முடிவுகளில் தாக்கம்: அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளில் கணிசமான செல்வாக்கைச் செலுத்துவதுடன், இலங்கையில் வசிக்கும் வாக்காளர்களின் தேர்தல் செல்வாக்கையும் குறைக்கக்கூடும்.

  2. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்: இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்களையும், தற்காலிகமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளையும் ஒரே வகையில் கருதக்கூடாது.

  3. வாக்குரிமையின் விளைவுகள்: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது தேர்தல் முடிவுகளால் ஏற்படும் பல விளைவுகளை நேரடியாக எதிர்கொள்வதில்லை.

  4. அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்: பணவீக்கம், வேலையின்மை, மருந்துகள் மற்றும் உரப் பற்றாக்குறை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால் வெளிநாட்டு வாக்காளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.

  5. தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: தேர்தல் பிரசாரச் செலவுகளுக்கான வரம்புகள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் கால விதிமுறைகளை வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்துவது சிரமமானதாக அமையலாம்.

  6. சமமற்ற பிரசார வாய்ப்புகள்: சில நாடுகளுக்கு பயண விசா கட்டுப்பாடுகள் காரணமாகச் செல்ல முடியாத வேட்பாளர்கள், வெளிநாட்டு வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதில் பாதிப்புகளை எதிர்கொள்ளலாம்.

இதன்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் குறிப்பிட்ட கம்மன்பில, பல தசாப்தங்களாக ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடைய முயன்ற இலக்குகளைப் பிரிவினைவாதக் குழுக்கள் தேர்தல் செல்வாக்கின் ஊடாக அடையக்கூடிய நிலை உருவாகலாம் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றையும் முன்வைத்துள்ளார்.

எனவே, இலங்கையின் தேசிய நலன்களுக்கும் நாட்டில் வசிக்கும் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி, குறித்த முன்மொழிவுகளைக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.