அசுர ஆட்டம் - 28 பந்துகளில் சதம்; 52 பந்துகளில் இரட்டைச் சதம் ; சூர்யவன்ஷி வரலாற்று சாதனை
கிரிக்கெட் அரங்கில் இளம் திறமையாளரான இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஆடவர்க்கான’லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் இருசதம் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஆசியக் கிண்ண ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ 50 ஓவர் தொடரில் ஐக்கிய அரபு எமீரகத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடிய 15 வயதான சூர்யவன்ஷி, 28 பந்துகளில் சதம் அடித்தும், 40 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்தும், 52 பந்துகளில் 200 ஓட்டங்களைக் கடந்தும் அசத்தினார்.
இவை அனைத்தும் ‘லிஸ்ட் ஏ’ (List A) போட்டிகளுக்கான சாதனைகள் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், சூரியவன்ஷி அடித்த 200 ஒடுடுங்கள் இதற்கு முந்தைய சாதனையான 103 பந்துகளில் எடுக்கப்பட்ட 200 ஓட்டங்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு வேகமானது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதன்பின்னர், 28 சிக்ஸர்களை உள்ளடக்கிய தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்டு 204 ஓட்டங்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயித்த 250 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா எளிதாக எட்டி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்தது.
அணியின் மொத்த ஓட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டங்கள் சூர்யவன்ஷியின் துடுப்பாட்ட மட்டையில் இருந்தே வந்தன.
‘லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் என்பது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரிக்கெட் வகையாகும்.
இது உலகம் முழுவதும் நடைபெறும் உயர்மட்ட உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளையும், இந்தியா ‘ஏ’ (India A) போன்ற முன்னணி நாடுகளின் மேம்பாட்டுக் குழுக்கள் (development teams) பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளையும் உள்ளடக்கியது.
பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 175 ஓட்டங்கள் குவித்து இந்தியா வெற்றி பெறவும் சூர்யவன்ஷி உதவியிருந்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட சூர்யவன்ஷி மேலும், சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவான் வீரர் வசம் இருந்த சாதனையை முறியடித்து இந்தியாவின் சார்பில் சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
Editor