உலக அழகியான திருமணமான பெண், தாயார் 

உலக அழகியான திருமணமான பெண், தாயார் 

75ஆவது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த 27 வயதான ஜெனிபர் பாரெட்டோ வெற்றிபெற்று மகுடம் சூடியுள்ளார்.

இதன் மூலம் மிஸ் யுனிவர்ஸ் வரலாற்றில் திருமணமான பெண் மற்றும் தாயார் என்ற அடையாளங்களுடன் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் போட்டியாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நவம்பர் 24ஆம் திகதி புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 116 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஜெனிபர் பாரெட்டோவுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் மகுடம் சூட்டினார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் புவேர்ட்டோ ரிக்கோவுக்குக் கிடைத்த மகுடம்

இந்த வெற்றியின் மூலம் புவேர்ட்டோ ரிக்கோ ஆறாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.

இதற்கு முன்னர் 1970, 1985, 1993, 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த அழகிகள் இந்த மகுடத்தை வென்றிருந்தனர்.

குறிப்பாக, 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தப் பட்டம் புவேர்ட்டோ ரிக்கோவுக்குக் கிடைத்துள்ளது.

உளவியல் துறையில் கல்வித் தகுதி பெற்ற அழகி

ஜெனிபர் பாரெட்டோ அழகிப் போட்டியாளராக மட்டுமன்றி, உளவியல் மற்றும் சமூகப் பணித்துறைகளிலும் கல்வித் தகுதி பெற்றவர்.

உளவியலில் இளங்கலைப் பட்டமும், உளவியல் மற்றும் மருத்துவ சமூகப் பணித்துறைகளில் முதுகலைப் பட்டங்களும் பெற்றுள்ளார். அதேவேளை, சமூக நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இறுதிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த மெலிசா நுனெஸ் இரண்டாம் இடத்தையும், வெனிசுலாவைச் சேர்ந்த கிளாரா வேகாஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்து போட்டியாளர்களும் இறுதிச் சுற்றின் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற்றனர்.

3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட மகுடம்

இந்த ஆண்டின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மகுடத்தை ஜெனிபர் பாரெட்டோ அணிந்துள்ளார்.

18 கரட் வெள்ளைத் தங்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த மகுடத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அழகிப் போட்டியின் 76ஆவது பதிப்பு அடுத்த ஆண்டு கோஸ்டா ரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.