கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மலையக ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் நேற்று (24) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
கார்த்திகை மாதம் இந்து மக்களின் ஆன்மீக வாழ்வில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இம்மாதத்தில் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபமேற்றி இறைவனை வழிபடுவதுடன், தான தர்மங்களில் ஈடுபடுவதும் சிறப்பான ஆன்மீகப் பலன்களைத் தரும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வும் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிவபெருமானின் ஜோதி வடிவத்தைப் போற்றும் வகையிலும், இருள் நீங்கி ஒளி பரவ வேண்டும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருக வேண்டும் என்ற ஆன்மீகச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தப் பாரம்பரிய நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். அத்துடன், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர்.
Editor