இலங்கையின் பொருளாதார மீட்சி வலுவானது ; எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதார மீட்சி வலுவானது ; எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதார மீட்சி வலுவானதாகவும் நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகளின் முக்கிய அங்கமாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடில்லியில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாகச் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இந்த ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்புத் துறையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுவதுடன், இராணுவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானங்கள், கப்பல்கள், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான உலர் கப்பல் தளங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இடம்பெற்று வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாலைதீவில் தற்போது நடைபெற்று வரும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டையும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்குப் பின்னரும் இந்தியாவின் ஆதரவு

இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச நாணய நிதியத் திட்டம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கும்போது இந்தியா வழங்கும் ஆலோசனை என்னவெனக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், இலங்கைக்கு ஆலோசனை வழங்குவது தனது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார மீட்சி வலுவானதாகவும் நிலையானதாகவும் இருப்பதாகப் பொதுவான மதிப்பீடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இன்னும் பல உள்ளதாகவும், நாட்டின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மைய புயல் அனர்த்தத்தைத் தொடர்ந்து இலங்கையின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய உதவித் தொகுப்பை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.