கைது செய்யப்படுவதாரா கோட்டா - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் அடுத்தகட்ட விசாரணைக்கு உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இதன்படி, குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (25) நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மார்ச் 5ஆம் திகதியை நிர்ணயித்தது.
கைது செய்வதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்தது
கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதனை ஆரம்பக்கட்டத்திலேயே நிராகரித்தது.
மனுவை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு வழங்குவதற்கும் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டின் ஊடாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை இரத்துச் செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புபடுத்தி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் கோரியிருந்தார்.
வழக்கின் அடுத்தகட்டம் மார்ச் 5ஆம் திகதி
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, மேன்முறையீட்டு மனு தொடர்பான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீடு மனு மீதான விசாரணை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இடைப்பட்ட கால்ததில் அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உள்ளது. இதனால் அவர் இடைப்பட்ட காலத்தில் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்படுவாரா என தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
Editor