உறுதியானது 1350 ரூபா சம்பள உயர்வு - அனைத்து வழக்குகளும் வாபஸ்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணயசபை பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இன்றைய தினம் தொழில் அமைச்சில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை கூடியது.
பல வாத விவாதங்கள், பல வர்த்தமானிகள், பல வழக்குகள் என நீண்டு கொண்டு சென்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பிலான இழுப்பறி நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அரசாங்கமும் தொழில் அமைச்சும் சம்பள நிர்ணய சபையும் ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.
அடிப்படை சம்பளம் 1350 ரூபாய் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி சேவைக்கால கொடுப்பனவு என்பன 1350 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கே வழங்கப்படும்.
ஈபிஎப், ஈடிடிப் 15 வீதம் தொழில் தருனர்களினால் வழங்கப்படும். அதனையும் ஒன்று சேர்த்தால் ஒரு நாள் தொழிலுக்கு செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு 1552 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். இன்றில் இருந்து இதனை நடைமுறைபடுத்த விசேட வர்த்தமானி வெளியிடப்படும்.
இதற்கு மேலதிகமாக வழங்கப்படுகின்ற ஊக்குவிப்புத்தொகை அந்தந்த பிரதேசங்களுக்கும் , துறைகளுக்கும் ஏற்ற வகையில் தொழிற்சங்கமும் மற்றும் நிர்வாகங்களும் கலந்துரையாடி முறையான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கட்டுப்பாட்டு எல்லை கிடையாது.
இருப்பினும் மேலதிக நிறைக்கான கொடுப்பனவு 1 கிலோவிற்கு 50 ரூபாய்க்கும் மேலதிகமாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.
மேலும் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Editor