பாடசாலை உணவகங்களில் துரித உணவுகளுக்கு அதிரடி தடை - வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலை உணவகங்களில் துரித உணவுகளுக்கு அதிரடி தடை - வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட மருத்துவர் புத்திக்கா சுதசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளைப் பாடசாலைகளில் முற்றாகத் தவிர்ப்பதற்காக புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, இனிவரும் காலங்களில் பாடசாலை உணவகங்களில் பின்வரும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் சோசேஜஸ், மீட் போல்ஸ், பேக்கன் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பர்கர், ஹொட் டொக், சப்மரின் மற்றும் பீட்சா போன்ற துரித உணவுகளும் இனி அனுமதிக்கப்பட மாட்டாது.

மேலும் கிரீம் பனிஸ், ஜாம் பனிஸ், பேஸ்ட்ரி வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிற்றுண்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடி நூடுல்ஸ், சூப் கட்டிகள், தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் இதில் அடங்குகின்றன.

சுவிங்கம், லாலிபாப், ஜெல்லி வகைகள், ஐஸ் பாக்கெட்கள் உள்ளிட்ட அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் காபனேற்றப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பாக்கெட் பானங்கள் ஆகியவற்றையும் பாடசாலை உணவகங்களில் விற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர்களை சிறு வயதிலிருந்தே தொற்றா நோய்களில் இருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும் முக்கியமானதாகும் என விசேட மருத்துவர் புத்திக்கா சுதசிங்ஹ வலியுறுத்தியுள்ளார்.