தேர்தலை தாமதப்படுத்தும் எந்த முயற்சியையும் உடனடியாக நிறுத்தவேண்டும் - சரத் பொன்சேகா
ஜனநாயகத்தின் கொள்கைகளை அனைத்து சந்தர்ப்பத்திலும் பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை தாமதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் அடிப்படையில் விளக்கமளிக்கவேண்டும் என கோரும் மனுவொன்றை வர்த்தகர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
சிடி லெனாவா என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும் என தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் நீதிமன்றம் இந்த விளக்கத்தை வழங்கும்வரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த செய்திக்கான தனது சமூக ஊடக பதிவில் சரத்பொன்சேகா தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 17 2024ம் ஆண்டிற்கும் ஒக்டோபர் 16ம் திகதிக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் பெருந்துன்பதுயரங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சரியான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தங்களின் உரிமையை பறிப்பதே அவர்கள் இறுதியாக அனுபவிக்ககூடிய மோசமான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் கொள்கைகளை அனைத்து சந்தர்ப்பத்திலும் பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களும் அனைத்து பேதங்களையும் கைவிட்டுவிட்டு இந்த அநீதிக்கு எதிராகஅணி திரளவேண்டும் வாக்களிப்பதற்கான எங்கள் உரிமைக்காக போராட முன்வரவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Editor