'எல்ல விபத்து' மணல் திட்டு - விபத்துகளை தடுக்குமா?
பதுளை - எல்ல வீதியில் ஐந்தாம் மைல் போஸ்ட் பகுதியில் கடந்த 04ம் திகதி பஸ் விபத்தொன்று இடம்பெற்றது. இந்த விபத்தால் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்க மணல் திட்டொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த ஆபத்தான வளைவில் பல்வேறு விபத்துக்கள், அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டு குறித்த ஆபத்தான வளைவில் இனிவரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தற்போது மணல் நிரப்பி திட்டொன்று நிர்மாணிக்கப்பட்டு பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது விபத்துக்களின் போது வாகனங்கள் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாவதை தடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், இந்த பாதை முழுவதும் இவ்வாறான பள்ளத்தாக்குகள் அதிகமாக உள்ளன. அங்கு மாத்திரமல்ல மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான ஆபத்தான பாதைகள் அதிகமாக உள்ளன.
எனவே, இந்தப் பகுதிகளில் இடம்பெறும் விபத்துகளை தடுக்க உரிய போக்குவரத்துச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வேகக் கட்டுப்பாடு என்பது இந்தப் பகுதிகளுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
ஆபத்தான பாதைகளில் கூட பஸ் சாரதிகள் பாரிய வேகத்தில் பயணிக்கின்றனர். வீதிச் சட்டங்களை கடைப்பிடிப்பதில்லை.
பழுதடைந்த பஸ்கள் அதிகமாக உள்ளன. மத்திய மலைநாட்டில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து குறித்து நிரந்தரமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கு மக்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமாக உள்ளது.
சாரதிகளுக்கான கற்கை நெறிகள் அவசியமாக உள்ளன. அவர்கள் இந்த தொழிலின் தார்மீகம் தெரியாது பணியாற்றுகின்றனர்.
பல உயிர்களை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் உயிர்காக்கும் வாகனத்தை செலுத்துகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் போன்று சாரதிகளுக்கான கல்வி முறைகள் அவசியமாக உள்ளது.
குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் இந்த விடயத்தில் அவசியமாக உள்ளதால், முதல் கட்டமாக கடுமையான வேகக் கட்டுப்பாடும் கடுமையான போக்குவரத்துச் சட்டங்களும் மத்திய மலைநாட்டில் அறிமுகப்படுத்தப்ப வேண்டும்.
ஒரு பகுதியில் மணல் திட்டை அமைப்பதன் மூலம் இவ்வாறான விபத்துகளை தடுக்க முடியாது என்பதை மலைநாடு இணையத்தளம் வலியுறுத்தகிறது.
இதேபோன்று அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையிலான போட்டி மற்றும் நேர அட்டவணைகளை மாற்றுவதும் கட்டாயமாகும்.
Editor