எரிவாயு தட்டுப்பாடு : நாளை முதல் விநியோகம்
நாட்டின் பல பகுதிகளில் தற்போதும் வீட்டு சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர்ப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாளை(27) காலை முதல் இவை விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இதன்படி, இந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிவாயு அளவு 28,000 மெட்ரிக் தொன்னை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தமது தினசரி சந்தை வெளியீட்டை 2,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,700 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெல்தெனிய மற்றும் திகண போன்ற பகுதிகளில் மக்கள் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிவாயு கையிருப்புகளை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் டொலர் தட்டுப்பாடோ அல்லது உலக சந்தையில் விலை அதிகரிப்போ இல்லாத நிலையிலும், இந்த எரிவாயு தட்டுப்பாடு தொடர்வது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகின்றது.
Editor