நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை; 7000 பேர் பாதிப்பு!
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் அனர்த்தத்தில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் அனர்த்தத்தில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
212 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவில் வவுனிக்குளம் பெருக்கெடுத்தமையினால் மாந்தை கிழக்கு பகுதியின் தரைவழி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
செல்வபுரத்திலிருந்து சிவபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியிலும் துணுக்காயில் இருந்து நட்டாங்கண்டலுக்கு செல்லும் பிரதான வீதியிலும் வௌ்ளம் நிறைந்துள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பண்டாரவன்னி, புளியங்குளம் பகுதிகளிலும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சந்தவெளி - திகிலிவெட்டை இறங்குதுறை படகுப்பாதை நீரில் அடித்துச்செல்லப்பட்டதால், மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
இன்று காலை 06 மணியளவில் திகிலிவெட்டை - சந்திவௌி படகுப்பாதை, இயந்திர கோளாறு காரணமாக பயணிகளுடன் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த படகுப்பாதை திருத்தபடும் வரை சுமார் 4 மணித்தியாலம் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
கிரான் சந்தியிலிருந்து குடும்பிமலைக்கு செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்து கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு பெய்த பலத்த மழையினால் வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தனமடு ஆறும் பெருக்கெடுத்துள்ளதால், சித்தாண்டி 2, 3, 4 கிராம சேவகர் பிரிவுகளின் கரையோரங்களிலுள்ள வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக சில பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கை அடுத்து,
82 குடும்பங்களை சேர்ந்த 270 பேர் இடப்பெயர்ந்துள்ளனர். இவர்கள் இரண்டு முகாம்களில் தங்கியுள்ளனர்.
பாலியாறு பெருக்கெடுத்ததால், தேவன்பிட்டி கிராமத்தை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக இரணைமடு ஐயன்கோவிலடி பகுதியை சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பலத்த மழையையடுத்து, இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனையடுத்து, ஐயன்கோவிலடியை சேர்ந்த 23 குடும்பங்களின் 70 பேர் இடம்பெயர்ந்து, பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கண்டி - பன்வில, ஆகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்பதால், விழிப்புடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Editor