ஹட்டன் பேக்கரியின்  வெட்டு பாணில் மனித தோல்!

ஹட்டன் பேக்கரியின்  வெட்டு பாணில் மனித தோல்!

ஹட்டனில் பாண் வாங்கிய ஒருவருக்கு அதிர்ச்சிகரமான சம்பமொன்று நடந்துள்ளது. 

இலங்கையில் உணவுகளின் தரம் தொடர்பில் நீண்டகாலமாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதற்கான சட்டக் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை. 

இதுகுறித்து பாவனையாளர்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தயாரிக்கப்பட்ட வெட்டு பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று (25) இரவு உணவிற்காக ரூ.180 இற்கு வெட்டு பாண் வாங்கிய வாடிக்கையாளர், அதை  உண்ண முயன்றபோது ஒரு துண்டில் விரல் காயத் தோல் இருப்பதை கண்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பாணையும், அந்த காயத் தோல் துண்டையும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பேக்கரி உரிமையாளர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பலமுறை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய சம்பவத்தை அடுத்து பேக்கரி உரிமையாளருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.