இலங்கையில் தனிநபருக்கு மாதாந்தம் 16,730 ரூபா வேண்டும்
இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்திர செலவு குறித்த புதிய தகவல்களை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.
அதற்கமைய, நாட்டின் அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது.
இங்கு ஒருவர் வாழ்வதற்கு மாதம் 18,044 ரூபாய் தேவைப்படுகிறது.
மிகக்குறைந்த செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. இங்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய 15,997 ரூபா தேவைப்படுகிறது.
கொழும்பிற்கு அருகிலுள்ள கம்பஹா மாவட்டத்தில் 17,951 ரூபா ஒரு தனி நபருக்கு அவசியமாக உள்ளதுடன், கம்பஹா மாவட்டம் இந்தப் பட்டியிலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோன்று நுவரெலியா மாவட்டத்திலும் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இங்கு ஒரு தனிநபருக்கு மாதாந்த அடிப்படைச் செலவுக்காக 17,593 ரூபா அவசியமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் நுவரெலியா மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் முறையே ரூ.16,163 மற்றும் ரூ.16,255 அவசியம் என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தரவுகள் மாதாந்தம் திருத்தப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறுமைக் கோடு என்பது உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தைக் குறிக்கிறது.
Editor