தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்!

- அமைச்சர் ஜீவனின் செயற்பாடு தொடர்பில் உடரத்தல தோட்ட நிர்வாகம் அறிக்கை -

தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்!
நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் அண்மையில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து அரசியல் ரீதியான அணுகுமுறைகள் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பெற்றுள்ள வர்த்தக நாமத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்றும் தோட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு குறித்த தோட்ட நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் கடந்த வாரம் இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றது. சர்வதேச தரம்வாய்ந்த தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஏராளமான தரச் சான்றிதழ்களைப் பெறுவது அவசியமாகும்.
இந்தத் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களில் அடிக்கடி கண்காணிப்பு சோதனைகள் நடப்பதுண்டு. குறிப்பாக உணவு, குடிபானம் உள்ளிட்ட உற்பத்திகளில் இந்த தரக் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாளும்போது, அனுமதியின்றி உட்பிரவேசித்து, உற்பத்திகள் நடக்கும் இடத்தில் குழப்பம் விளைவிப்பது அந்த உற்பத்தித் துறைக்கும், அந்த தொழிற்சாலைகள் பெற்றுள்ள தரச் சான்றிதழ்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும்.
குறிப்பாக இவ்வாறான தொழிற்சாலைகளுக்குச் செல்லும்போது, உரிய அனுமதியுடன் செல்வது கட்டாயமாகும். தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்வதேச வர்த்தகம் சார் உற்பத்திகளின் போது அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்துகொள்வது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பெற்றுள்ள வர்த்தக நாமத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று தோட்டக் கம்பனி சார்பாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
எவ்வாறாயினும், தொழிலாளர் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது அவசியமாகும். அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்துகொள்வது ஒட்டுமொத்த தேயிலை சன்நாமத்திற்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும். குறிப்பாக பிரச்சினைகளின் போது இதனைவிட ஆக்கபூர்வமாக, சட்டரீதியாக அணுகுவது எதிர்காலத்தில் தொழிலாளர்களின் நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்குமே தவிர, அரசியல் பலத்துடன் இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் பயனளிக்காது.
நுவரெலியா, நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கம்பனிக்குச் சொந்தமான தோட்டத்தில், தேயிலை உற்பத்திக்குப் பதிலாக, கோப்பி பயிருடவதற்காக குறித்த நிறுவனம் பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்தத் திட்டத்தை ஆரம்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேசத்தில் இரண்டு தோட்டத் தலைவர்கள் இருவர் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.