இலங்கை போக்குவரத்து சேவையில் இணையும் புதிய பஸ்கள் 

இலங்கை போக்குவரத்து சேவையில் இணையும் புதிய பஸ்கள் 

இலங்கையின் பொது போக்குவரத்து சேவையை நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவின் Foton நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 104 புதிய மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த மே மாதத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்தப் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) துணை நிறுவனமான Lanka Metro Transit சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் Indra Traders (Pvt) Ltd நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, 104 புதிய மெட்ரோ பஸ்களும் 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இந்த புதிய பஸ்கள் குளிரூட்டப்பட்ட (AC), குறைந்த உயர தரையமைப்புடன் (Low-floor) மற்றும் நவீன பயணிகள் வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரப் பகுதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தவும், பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

தற்போது மெட்ரோ பஸ் சேவை மகும்புர, கடவத்தை, பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயங்கிவருகிறது. புதிய 104 பஸ்கள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு அதிக வசதி, நேர்த்தியான சேவை மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.