வற் வரி குறித்து ஜனாதிபதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது

வற் வரி குறித்து ஜனாதிபதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை   ஆரம்பித்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த  முடிந்தது என்றும், இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த   சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க  எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல்  முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது.

பல தசாப்தங்களாக  அவதிப்பட்ட விவசாயிகளுக்கு  செலுத்தும் மரியாதையாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உரித்து வேலைத்திட்டத்தின் ஊடாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  தாம் இழந்த காணி மற்றும் வீட்டு உரிமைகளை மீண்டும் வழங்கியமை வரலாற்று மற்றும் புரட்சிகரமான நடவடிக்கையாகும்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு முழுவதும் 4917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தும் வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும், அனைத்து மருத்துவ உதவிகளும் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு  2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி முன்னோக்கிச் செல்கையில் பொருளாதாரம் தொடர்ந்தும் ஸ்திரப்படும் நிலையில்,  வரிச்சுமை குறைக்கப்படும் எனவும் அதேவேளை வற் வரியை திருத்துவதற்கான வாய்ப்பு  ஏற்படும்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த  எதிர்பார்ப்பதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அத்திவாரமாகவும், கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையில் திருப்புமுனையாகவும் அமையும்.

இந்த ஆண்டு 2% - 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஐ.எம்.எப்  உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கணித்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் இதனை 5% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து நிலை அறிவிக்கப்படும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பூச்சியமாக காணப்பட்டது. 2023ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வெளிநாட்டு கையிருப்பு 4.4 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளேன்.

எந்தத் திட்டங்களையும் நான் மறைக்கவில்லை. நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது நான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி கடுமையான தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாக செயற்படுத்தியுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் உரிமை மற்றும் வரபிரசாதங்கள் மீறப்பட்டுள்ளன. இழக்கப்பட்ட உரிமைகளை கட்டம் கட்டமாக மீளப்பெற்றுக்கொடுப்பேன். குறைந்த வருமானம் பெறும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் 20 கிலோகிராம் அரிசி வழங்கப்படும்.

நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம்
வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும். வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டவுடன் தெரிவு செய்யப்பட்ட அரச முறை கடன்களை செலுத்த வேண்டும், அதற்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதார சேவைத்துறையின் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்படும்.

பிளவுபடாத வெளிவிவகார கொள்கை விரிவுபடுத்தப்படும். சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார மீட்சிக்கான செயற்திட்ட பேச்சுவார்த்தைக்கு ஒன்றிணைய அனைவரும் தயாரெனில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைக்கத் தயார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.