ஜனாதிபதி அநுரவை சந்தித்த ரஷ்ய தூதுவர்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த ரஷ்ய தூதுவர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை  இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹரியன் (Levan S. Dzhagaryan) இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாழ்த்துச் செய்தியை லெவன் எஸ்.தஹரியன், அநுரகுமார திஸாநாயக்கவிடம் பகிர்ந்துகொண்டார். 

ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஆழமடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி புடின் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில்  கவனம் செலுத்தப்பட்டது.

வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருவரும் கலந்துரையாடினர். 

அதே நேரத்தில் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக தூதரக உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.